ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தொழில்நுட்பத்துறை அமைச்சருமான நாரா லோகேஷ், தனது மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, கர்நாடகாவில் உள்ள சில தொழிற்சாலைகளை ஆந்திராவிற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளார். பெங்களூரில் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடு குறித்து தொழிலதிபர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது, லோகேஷ் அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அனந்தபூரில் உலக தரத்தில் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என லோகேஷ் கூறி, “நீங்கள் அங்கு உங்கள் தொழிற்சாலைகளை தொடங்கலாம்” என்று தொழிலதிபர்களிடம் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேயின் மகனும் அமைச்சருமான பிரியங்க் கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “ஆந்திரா இப்போது ஒட்டுண்ணி மாநிலமாக மாறியுள்ளது” என அவர் விமர்சித்துள்ளார்.
இந்த விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில், கர்நாடகாவின் மைசூரில் ரம் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர், “கர்நாடகாவில் தொழில் செய்வதில் பல பிரச்சினைகள் உள்ளன” என்று கூறியதும், உடனே ஆந்திர அரசு அவரை தொடர்பு கொண்டுள்ளது. “உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்” என லோகேஷ் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள், இரு மாநிலங்களுக்கிடையே தொழில் துறையில் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஆந்திரா பல துறைகளில் நவீன வசதிகளை ஏற்படுத்தி வருவதால், எதிர்காலத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே பொருளாதாரப் போட்டி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.