புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த 13-ம் தேதி முதல் கோலாகலமாக நடந்து வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் புனித நீராட இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த புனித நீராடல் நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான (நாசா) விண்வெளி வீரர் டான் பெட்டிட் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “கங்கை நதி யாத்திரையாக நடைபெறும் 2025 மகா கும்பமேளாவை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பார்க்கும்போது இரவில் ஒளிரும். “உலகிலேயே அதிக மக்களைக் கவரும் இந்த விழா பிரகாசமாக ஜொலிக்கிறது” என்று இரண்டு புகைப்படங்களை வெளியிட்டார். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை கவரும் திருவிழா சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.