குஜராத்தின் அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள், 2025 ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தன. இந்நிலையில், பல்கலைக்கழகம் திடீரென இந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையிலும், எந்தவொரு புதிய தேதியையும் குறிப்பிடாது தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வை எழுத ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் விண்ணப்பித்திருந்தனர். இந்த திடீர் முடிவால், தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்வு மையமாக சென்னை மட்டும் தேர்வாக இருந்த நிலையில், பலர் முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணத்திற்குத் தயாராயிருந்தனர்.
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களால் நாடு முழுவதும் தேர்வு நடைபெற இயலாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் NFAT 2025 எனப்படும் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வை எழுத திட்டமிட்டிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பல்கலைக்கழகம், டிக்கெட் முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் பயண டிக்கெட்டுகளைத் திருப்பிச் செலுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளது.
இதனிடையே, தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் தொடர்பான சிக்கல்கள் ஏற்கனவே ஒரு வாரமாக தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில் மாணவர்கள் தங்களது விரக்தியையும் பதற்றத்தையும் வெளிப்படுத்தி வந்தனர். அந்தக் கண்டனங்கள் மத்தியில் வந்துள்ள இந்த திடீர் ஒத்திவைப்பு, மாணவர்களின் எதிர்பார்ப்புகளை உடைத்துள்ளது.
தொடர்ந்து, இந்த தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாணவர்கள் பதற்றத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.