ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள JECC மையத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த கண்காட்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
இதன் மூலம், நீதித்துறையில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, 2027-க்குப் பிறகு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், வழக்கு மிக விரைவாக விசாரிக்கப்படும். வழக்குகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். புதிய குற்றவியல் சட்டங்கள் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்தியுள்ளன. முந்தைய காலகட்டத்தில், ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட 100 பேரில் 42 பேர் மட்டுமே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

புதிய தண்டனைச் சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகு, ராஜஸ்தானில் 60 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 2014-க்கு முன்பு, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 11 வது இடத்தில் இருந்தது. இப்போது நாம் 4 வது இடத்திற்கு முன்னேறிவிட்டோம். விரைவில் 3 வது இடத்தை அடைவோம். 2047-ம் ஆண்டுக்குள், வளர்ந்த இந்தியா உருவாகும். கடந்த ஆண்டு டிசம்பரில், ‘ராஜஸ்தான் எழுச்சி’ என்ற பெயரில் ஒரு மாநாடு நடைபெற்றது.
அப்போது, ரூ.35 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானன. மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இதை விமர்சித்துள்ளார். முதல்வர் பஜன் லால் சர்மாவின் ஆட்சிக் காலத்தில், ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மிகக் குறுகிய காலத்தில் செயல்படுத்தப்பட்டன. விரைவில் அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரும். இதன் காரணமாக, ராஜஸ்தான் அபரிமிதமாக வளர்ச்சியடையும். டிசம்பரில் ‘ராஜஸ்தான் எழுச்சி’ மாநாடு மீண்டும் நடைபெறும்.
இது அதிக அளவு முதலீடுகளை ஈர்க்கும். ஜிஎஸ்டி வரி சமீபத்தில் குறைக்கப்பட்டது. இதன் மூலம், 395 பொருட்களின் மீதான வரி பூஜ்ஜியமாகிவிட்டது. இதன் காரணமாக, சாமானிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். வரவிருக்கும் தீபாவளி பண்டிகையின் போது, உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதை அனைவரும் உன்னிப்பாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.