டெல்லி: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் மத்திய கிழக்கு வங்கக் கடலில் டானா புயலாக வலுப்பெறும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வங்கக் கடலின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று 23-ம் தேதி புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக மாறும் போது ஏற்கனவே புயல் பட்டியலில் உள்ள பெயர்களின் வரிசைப்படி அதற்கு ‘டானா’ என பெயரிடப்படும்.
டானா புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே வரும் 24-ம் தேதி காலை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.