ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில், அதன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தற்போது, பக்தர்கள் திருமலையில் தண்ணீர் பாட்டிலை வாங்கி, திரும்ப ஒப்படைத்தால் ரூ.30 வழங்கப்படுகின்றன.
திருப்பதி மற்றும் திருமலை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை கட்டாயமாகக் கொண்டுவர முடியாது. தற்போது, திருமலையில் உள்ள கடைகளில் கண்ணாடி தண்ணீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதில் 750 மில்லி கண்ணாடி பாட்டிலுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை வசூல் செய்யப்படுகிறது, மற்றும் பாட்டிலை திரும்ப ஒப்படைத்த பக்தர்களுக்கு ₹30 திருப்பி கொடுக்கப்படுகிறது.
மேலும், 500 மில்லி கண்ணாடி பாட்டிலுக்கு ரூ.40 வசூலித்து, அதனை திரும்ப ஒப்படைத்தால் ₹25 திருப்பி கொடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக, சில கடைகளில் வழக்கமாகக் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதாகவும், பாட்டிலை திருப்பி கொடுத்த பின்னர் சரியான தொகை வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், தேவஸ்தானம் புதிய கட்டண முறைகளை அமல்படுத்தியுள்ளது.
பக்தர்கள் இந்த புதிய திட்டத்திற்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பதி திருமலை தேவஸ்தானம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க, புதிய, எளிதான, மற்றும் குறைந்த விலையுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த தண்ணீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.