புது டெல்லி: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு அறிக்கையில் கூறியதாவது:- ரூ.3,000 கட்டணம் செலுத்தி தனியார் வாகனங்கள் வாங்கக்கூடிய FASTag பாஸ் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒரு வருடத்தில் 200 முறை வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்க முடியும். கடந்த நான்கு நாட்களில் மட்டும், 5 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்தப் பயண பாஸைப் பெற பதிவு செய்துள்ளனர்.
அதிக வருடாந்திர பாஸ் கொள்முதல் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி, FASTag வருடாந்திர பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் நாளான, 1.4 லட்சம் பயனர்கள் வருடாந்திர பாஸை வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர். சுங்கச்சாவடிகளில் சுமார் 1.39 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டன.

இதை இந்திய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. FASTag வருடாந்திர பாஸை வாங்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் அதிகாரப்பூர்வ தளமான ராஜ்மார்க் யாத்ரா செயலி, கூகிள் பிளே ஸ்டோரில் முதலிடத்தில் உள்ள அரசு செயலியாக மாறியுள்ளது. இது ஒட்டுமொத்தமாக 23-வது இடத்தையும், பயணப் பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த செயலி 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களுடன் 4.5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தரவுகளின்படி, எந்த நேரத்திலும் சுமார் 20,000 முதல் 25,000 பேர் ராஜ்மார்க் யாத்ரா செயலியைப் பயன்படுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் நிறுவப்பட்ட 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த FASTag வருடாந்திர பாஸைப் பயன்படுத்தி தனியார் வாகனங்கள் சுதந்திரமாக பயணிக்கலாம்.