புது டெல்லி: சீனா, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே பாயும் பிரம்மபுத்திரா நதியின் திபெத்திய பகுதியான யார்லுங் சாங்போ நதியில் உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை சீனா கட்டத் தொடங்கியுள்ளது. இது இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா நதியால் பயனடையும் பகுதிகளைப் பாதிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
சீனாவுக்கு போட்டியாக சுமார் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான புதிய நீர்மின் திட்டத்தை இந்தியா கட்டத் திட்டமிட்டுள்ளதாக இப்போது தெரியவந்துள்ளது. இந்த திட்டம் சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டப்பட உள்ளது. சினிமா டிக்கெட் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த திட்டம் 2047-ம் ஆண்டுக்குள் பிரம்மபுத்திரா நதியிலிருந்து 76 ஜிகாவாட் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய மின் திட்ட ஆணையம் ரூ.7 லட்சம் கோடி செலவில் இதற்கான திட்டத்தை தயாரித்துள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மிகப்பெரிய நீர்மின்சார திட்டம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் அதன் துணை நதிகளிலும் உருவாக்கப்பட உள்ளது. 76 ஜிகாவாட் மின்சாரத்துடன் கூடுதலாக, பம்பிங் நிலையங்களிலிருந்து கூடுதலாக 11.1 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட உள்ளது.
பிரம்மபுத்திரா நதிப் படுகையில் அருணாச்சல பிரதேசம், அசாம், சிக்கிம், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் உள்ளதால், அந்தப் பகுதிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இது ஒரு மெகா திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முதல் கட்டம் 2035 இல் முடிவடையும். இதற்கு ரூ.2 லட்சம் கோடி செலவாகும். 2047-ல் நிறைவடையும் இரண்டாம் கட்டத்திற்கு ரூ.5 லட்சம் கோடி செலவாகும்.