புதுடில்லி: 2024-25ம் நிதியாண்டில், நாட்டின் ராணுவ ஏற்றுமதி 23,622 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது முந்தைய நிதியாண்டை விட 12.04 சதவீதம் அதிகமாகும்.

பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். 2023-24ம் நிதியாண்டில், நாட்டின் ராணுவ ஏற்றுமதி 21,083 கோடி ரூபாயாக இருந்தது. 2024-25ம் நிதியாண்டில், இது 12.04 சதவீதம் அதிகரித்து 23,622 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னணியில், பிரதமர் மோடி தலைமையில், 2029க்குள் ராணுவ ஏற்றுமதியை 50,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் இலக்கை அடைவதை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் முக்கிய வளர்ச்சி காணப்பட்டது. கடந்த 2024-25ம் நிதியாண்டில், ராணுவ பொதுத் துறை நிறுவனங்கள் 42.85 சதவீதம் வளர்ச்சி காண்கின்றன. இது உலக சந்தையில் இந்திய தயாரிப்புகளின் ஏற்றுக்கொள்கை அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது.
இந்தியாவுக்குப் பாதுகாப்பு தளவாடங்களில் இறக்குமதியை சார்ந்திருந்த நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியா சுயசார்பு நாடாக மாறி, உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.