ஏமன் நாட்டில் செவிலியராக பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா, அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். இந்திய அரசும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து இந்த தண்டனையைத் தடுக்க முயற்சி செய்த நிலையில், சமீபத்தில் இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது.

இந்த தகவலுக்கு வலு சேர்க்கும் வகையில், கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியார் பேச்சுவார்த்தை நடத்தியதும், இறுதி நேரத்தில் தண்டனை நிறைவேற்றப்படாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து நிமிஷா பிரியாவிற்கு நிம்மதி கிடைத்துவிட்டதா என்ற நம்பிக்கை பலரிடமும் ஏற்பட்டது.
இந்நிலையில், வெளிவந்த மரண தண்டனை ரத்து செய்ததற்கான தகவல் தவறானது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அபுபக்கர் முஸ்லியார் அளித்த தகவலில் உண்மைத்தன்மை இல்லை எனவும், தற்போது வரை ஏமன் அரசிடம் இருந்து எந்த செய்தியும் எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தி பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்திய அரசின் தூதரக முயற்சிகள் தொடரும் நிலையில், நிமிஷா பிரியாவின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து தெளிவான நிலைமை இன்னும் உருவாகவில்லை. இது குறித்து எதிர்வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.