உடுமலை : கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட சுகாதார அலுவலர் முரளிசங்கர் உத்தரவின் பேரில், தமிழக-கேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச் சாவடியில் மாவட்ட மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்.
மருத்துவ அலுவலர் ஆனந்தகுமார் கூறும்போது, ”தமிழகம் வந்த யாருக்கும் இதுவரை நிபா காய்ச்சல் இருப்பது கண்டறியப்படவில்லை.
ஒன்பது ஆறு சோதனைச் சாவடியில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 990 பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.