புதுடெல்லி: தற்போது நாடு முழுவதும் 5,12,18 மற்றும் 28 சதவீதம் என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்ததால், பரிசீலனை செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து ஆலோசித்து வரி விகிதம் திருத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘ஜிஎஸ்டி திருத்தம் தொடர்பான மறுஆய்வு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்நிலையில் வரி விகிதங்களை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் முடிவெடுக்கும். சாமானியர்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் முடிவெடுக்கும் என நம்புகிறேன்’ என்றார்.