காஷ்மீர் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது:- காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிலர் தந்தையை இழந்துள்ளனர். சிலர் தங்கள் மகன்களை இழந்துள்ளனர். இதில் தங்கள் சகோதர, சகோதரிகளை இழந்துள்ளனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்கு காஷ்மீர் வந்த கடற்படை அதிகாரி உயிரிழந்துள்ளார்.
அவன் மனைவிக்கு நான் என்ன சொல்வேன்? 10 வயது சிறுவன் தன் கண் முன்னே தந்தையை இழந்தான். அந்தப் பையனுக்கு நான் எப்படி ஆறுதல் கூறுவது? பஹல்காம் தாக்குதல் காஷ்மீர் மீதான தாக்குதல் மட்டுமல்ல. இது நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்பட்ட தாக்குதல். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 21 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். சுற்றுலா பயணிகளை காஷ்மீருக்கு வருமாறு அழைத்தோம்.

ஆனால் அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப முடியவில்லை. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. காஷ்மீரின் சட்டம், ஒழுங்கு மற்றும் சுற்றுலாவுக்கு நான் பொறுப்பாக இருக்கிறேன். சுற்றுலா பயணிகளை பாதுகாக்க தவறிவிட்டேன். அதற்காக நான் மிகவும் வேதனைப்படுகிறேன். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்னிடம் கேட்கின்றனர். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? சுற்றுலா பயணிகளை காஷ்மீருக்கு வருமாறு அழைக்கிறோம். அவர்களை வரவேற்பதும் பாதுகாப்பதும் நமது கடமை. காஷ்மீர் மக்கள் பயங்கரவாதத்தை விரும்பவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
கடந்த காலங்களில் காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் சீக்கியர்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நான் இன்னும் வருந்துகிறேன். இந்த நேரத்தில், காஷ்மீர் மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்புங்கள், பதாகைகளை உயர்த்துங்கள். நாம் ஒன்றுபட்டால் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும். உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரவாத பிரச்சனை நீடித்து வருகிறது. பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் பயங்கரவாதத்தை அடக்கி கட்டுப்படுத்த முடியும். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அனைத்து மசூதிகளிலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். சையத் அடில் உசேன் ஷா என்ற இளைஞன் பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் போது சுற்றுலா பயணிகளை பாதுகாக்க மிகவும் கடுமையாக போராடினார். பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, பலர் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஓடினர். ஆனால் அந்த இளைஞன் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டார். இந்த போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்தார். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலிருந்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர். உள்ளூர் கார் டிரைவர்கள் சுற்றுலா பயணிகளை இலவசமாக அழைத்துச் சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் இலவசமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு காஷ்மீரில் வரவேற்பு அளிக்கப்பட வேண்டும். காஷ்மீரில் அரசு பொறுப்பேற்ற பிறகு மாநில அந்தஸ்து கோரி வந்தேன். ஆனால் இந்த சோகமான நேரத்தில் எனது கோரிக்கையை வலியுறுத்த மாட்டேன்.
காஷ்மீரை உருவாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்தை வேரறுக்க அனைவரும் உறுதியுடன் இருக்க வேண்டும். காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல்வேறு மாநிலங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காஷ்மீரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்தந்த மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் உமர் அப்துல்லா பேசினார்.