மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, நவி மும்பை, ரத்னகிரி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று நடைபெறவிருந்த மும்பை பல்கலைக்கழக தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பெய்த மழையால் மாநகர பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
திங்களன்று, மும்பையில் ஒரு சில மணி நேரத்தில் சுமார் 300 மிமீ மழை பதிவானது. இதனால் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தும், சில இடங்களில் கிளைகள் முறிந்தும் விழுந்தன. மேலும், 12 இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. 72 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 10க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்தன.
முதல்வர் விளக்கம்: “5,000க்கும் மேற்பட்ட இடங்கள் மும்பை பெருநகரக் கழகத்தால் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. கடல் சீற்றம் மற்றும் அரபிக்கடலில் அதிக அலைகள் எழுவதால் மிதி ஆற்றில் கடல் நீர் செல்லாமல் இருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக வடிகால் வசதியில் சோதனை முயற்சியாக மைக்ரோ டன்னலிங் (டனலிங்) மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்கு உதவுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு இயந்திரம் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.