குன்றத்தூர்: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பஷீர் ஷேக். குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் பிள்ளையார் கோயில் தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக மனைவி ரெஜியா சுல்தானா (28) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு குடும்பத்தினர் அனைவரும் தூங்கச் சென்றனர். கொசுக்களை விரட்ட வீட்டில் கொசுவர்த்தி சுருள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவில், எதிர்பாராதவிதமாக கொசுவத்தி சுருளில் தீப்பிடித்தது.
இதில் ரெஜியா சுல்தானாவின் நைட்டியும் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த கணவர் பஷீர் ஷேக், மனைவி தீயை அணைக்க போராடினார். இதில், அவரது வலது கையில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும், ரெஜியா சுல்தானாவுக்கு இடுப்பு மற்றும் தோளில் தீக்காயம் ஏற்பட்டது.
இருவரும் வலியால் அலறி துடித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் ரெஜியா சுல்தானா சிகிச்சை பெற்று வருகிறார்.