புவனேஸ்வர்: அரசு மற்றும் தனியார் துறை பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை ஒடிசா மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா நேற்று அறிவித்தார்.
ஒடிசா மாநில துணை முதல்வரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான பிரவதி பரிதா நேற்று கட்டாக்கில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் பேசுகையில், “ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும்.
மாதவிடாய் சுழற்சியின் முதல் அல்லது இரண்டாவது நாளில் இந்த விடுப்பு எடுக்கப்படலாம். இருப்பினும், இந்த விடுப்பு எடுப்பது பெண்களின் விருப்பத்தைப் பொறுத்தது” என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு கென்யாவின் நைரோபியில் ஐக்கிய நாடுகளின் சிவில் சொசைட்டி மாநாடு நடைபெற்றது. இதில், ஒடிசாவைச் சேர்ந்த சிறுமி, மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கக் கோரி குரல் எழுப்பினார். ஒடிசாவைச் சேர்ந்த பெண்ணியவாதி ரஞ்சிதா பிரியதர்ஷினியும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு பற்றி பேசி சர்வதேச மாநாட்டில் அனைத்து பிரதிநிதிகளின் கவனத்தையும் ஈர்த்தார். உலகெங்கிலும் உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தில் உடல் வலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் வாதிட்டார்.