புதுடெல்லி: ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது சட்டமன்றம் இல்லாததால், லெப்டினன்ட் கவர்னர் தலைமையில் யூனியன் பிரதேசங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார், தேர்தல் கமிஷனர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சந்து ஆகியோர் வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஸ்ரீநகர் சென்று உள்ளாட்சி அதிகாரிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.
அதன்பின் அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். ஆலோசனை கூட்டத்தை நடத்திவிட்டு, ஜம்முவில் வரும் 10ம் தேதி தேர்தல் கமிஷனர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் செப்., 30க்குள் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தேர்தல் நடத்துவதற்கான பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தலைமை தேர்தல் ஆணையம் கேட்டறிந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை சமர்ப்பித்த பிறகு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தெரிகிறது.