புதுடெல்லி: டெல்லி ரோகினி பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி அருகே மர்மமான முறையில் வெடி விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் பள்ளியின் சுவர், அருகில் இருந்த கடை மற்றும் கார் ஆகியவை சேதமடைந்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள், வெடிகுண்டு படைகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். டிஎப்எஸ் அதிகாரிகள் கூறுகையில், “இன்று காலை 7.50 மணியளவில் சிஆர்பிஎஃப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே வெடிகுண்டு வெடித்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு விரைந்தோம். பெரிய தீவிபத்து எதுவும் ஏற்படவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனவே நாங்கள் திரும்பிச் சென்றோம். வெடிவிபத்துக்கான காரணம் பெற்றோல் வெடிகுண்டாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே அனைத்து விவரங்களும் தெரியவரும் என தடைய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் குண்டுவெடிப்பின் பின்னணியில் தீவிரவாத கோணம் எதுவும் கண்டறியப்படவில்லை. எவ்வாறாயினும், எப்எல்எஸ் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் எல்லாம் தெளிவாகிவிடும்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பட்டாசு வெடிப்பு என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் தடயவியல் குழுவினர் மற்றும் குற்றப் பிரிவினர் குண்டு வெடித்த இடத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்தனர்.
அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பால் அப்பகுதியில் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பின்னணியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
கடந்த 6 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.