புதுடில்லி: பணமோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை உள்ளிட்ட நிதிக்குற்றங்களில் சிக்கிய ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காக, கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஜூலை 21ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி இரு நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. ‘ஜங்லீ ரம்மி’, ‘ஜீட்வின்’, ‘லோட்டஸ் 365’ உள்ளிட்ட செயலிகள் சட்டவிரோத பண பரிமாற்றம், சூதாட்டம் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த செயலிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரபல நடிகர்கள், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றின் ஊடாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டன. இதன் பின்னணியில் நிதிக்குற்றங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்களும் விசாரணைச் சுழலில் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோத விளம்பர செயலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை பந்தய செயலிகளின் விளம்பரங்களை இயக்குவதில் முக்கிய பங்காற்றியதாகவும், அவற்றின் மூலம் சட்டவிரோதமான நிதி நடவடிக்கைகள் நிகழ்ந்ததாகவும் அமலாக்கத்துறை குறிப்பிடுகிறது. மொத்த மோசடி அளவு ரூ.6,000 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் சந்தேகத்தின் கீழ் உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆன்லைன் பந்தய விளம்பர நிறுவனங்களிடமிருந்து ரூ.500 கோடிக்கு மேல் பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சமூக வலைதள நிறுவனங்களின் பொறுப்பு, பிரபலங்களின் விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் நிதி ஒழுங்குமுறைகள் தொடர்பான கேள்விகள் இந்த வழக்கில் முக்கியத்துவம் பெறுகின்றன.