டேராடூன்: துறவியாக வேடமிட்டு மக்களை ஏமாற்றிய வங்கதேச நபர்கள் உள்பட 14 பேரை உத்தராகண்ட் போலீசார் கைது செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் போலி சாமியார்களை பிடிக்க போலீசார் “ஆபரேஷன் கலாநெமி” என்ற சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த சோதனையில் 14 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் வகையில் போலியான மதச்சடங்குகளை நடத்தி பண மோசடி செய்து வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சட்டம் ஒழுங்கு போலீஸ் ஐஜி நிலேஷ் ஆனந்த் பரானே, “ஆபரேஷன் கலாநெமி நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளோம். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் உள்பட 14 போலி சாமியார்களை கைது செய்துள்ளோம். இதுவரை மொத்தம் 5,500 பேரிடம் விசாரணை நடந்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 1,182 பேரை கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மாநில மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. போலி சாமியார்களின் வஞ்சகங்களை அடக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருவதால், எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் குறையும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே நிலவுகிறது.