புதுடெல்லி: சுதந்திர தின உரையின் போது வகுப்புவாத சிவில் சட்டம் குறித்து மோடி பேசியது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சுதந்திர தினத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நாங்கள் 75 ஆண்டுகளாக மத சிவில் சட்டத்துடன் வாழ்ந்து வருகிறோம். சிவில் சட்டம் மக்களிடையே பாகுபாடு காட்டுகிறது. எனவே, மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் இது” என்று கூறினார்.
மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. சிவில் சட்டம் மத அடிப்படையிலானது என்று சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி பேசியது அம்பேத்கரை அவமதிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மோடி தவறான தகவலை கூறுகிறார். அம்பேத்கர் 1950களின் மத்தியில் இந்து தனிநபர் சட்டங்களில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டார். ஆனால் இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெரும்பாலான நாடுகள் வேறுபாடுகளை அங்கீகரிக்கும் நோக்கில் நகர்கின்றன. வேறுபாடுகள் இருப்பது பாகுபாடு ஆகாது. இது பலமான ஜனநாயகத்தை சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, சுதந்திர தின உரையில் மோடி பேசியது, நாட்டை பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டத்துடன் ஒத்துப்போகிறது. ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா கூறுகையில், 11வது சுதந்திர தின உரையில் கூட மோடி தான் பிரதமர் என்பதை புரிந்து கொள்ள தவறிவிட்டார் என்பதுதான் மிக முக்கியமான மற்றும் கவலையளிக்கும் விஷயம்.
எதிர்க்கட்சிகளுக்கோ, உங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்கோ என்று ஒரு பிரதமர் இல்லை. மதச்சார்பின்மை என்பது ஒரு செயல்முறை மற்றும் உள்வாங்கப்பட வேண்டும், என்றார்.