மும்பை: கனமழை காரணமாக மும்பையில் இன்று (ஜூலை 13) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நகரில் 61.69 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையின் சில பகுதிகளில் இன்று காலை பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது.
குறிப்பாக, மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நகரில் 61.69 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மும்பைவாசிகள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது பருவமழை காலம் என்பதால், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு நகரங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையின் பாதிப்புகளை நிர்வகிப்பதற்கும் தணிப்பதற்கும் அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் உள்ளனர்.
மும்பை போக்குவரத்து காவல்துறை அதன் எக்ஸ் தளத்தில், “அந்தேரி சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எஸ்வி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்றார்.