புதுடில்லி : ‘பாகிஸ்தான் செல்வது, இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு உறவு குறித்து பேசுவதற்காக அல்ல; பல்வேறு நாடுகள் பங்கேற்கும் நிகழ்ச்சி’ என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 2001 இல் நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஒன்பது உறுப்பு நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் மாநாடு வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து, டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெய்சங்கர் கூறியதாவது: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில், இம்மாத மத்தியில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். நான் பாகிஸ்தானுக்குச் செல்வது இருதரப்பு உறவுகளைப் பற்றி பேசுவதற்காக அல்ல; பல்வேறு நாடுகள் பங்கேற்கும் நிகழ்ச்சி இது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றமான தன்மை இருப்பதால், எனது வருகை குறித்து ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடும். நான் தெளிவாக இருக்க வேண்டும். இது பல தேசிய நிகழ்வு. நான் இந்த அமைப்பில் நல்ல உறுப்பினராக, கண்ணியமான மனிதனாக, அதற்கேற்ப நடந்து கொள்வேன். உச்சி மாநாடு பாகிஸ்தானில் நடைபெறுவதால் எனது பயணத்தின் தன்மை மாறாது’ என்றார்.
இந்த மாநாட்டிற்குச் செல்லும்போது, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், உங்கள் திட்டங்கள் என்ன என்று கேட்கலாம். நான் தெளிவாகவும் கண்ணியமாகவும் இருப்பேன். உக்ரைன் மோதலாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசியாவில் நடந்த மோதலாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் உறுதியற்ற தன்மைக்கான பெரிய காரணிகள், கவலைக்குரிய பெரிய காரணிகள் என்று நான் நேர்மையாக கூறுவேன். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.