புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்று, துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை மக்களவை கூடியதும் பதக்கம் வென்ற மனு பாகருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “மனு பாகர் ஒலிம்பிக்கில் வரலாறு படைத்துள்ளார். அவரது வெற்றி மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.” என்று பாராட்டு தெரிவித்தார்.
சபாநாயகர் அவ்வாறு கூறியதும் அவையில் இருந்த உறுப்பினர்கள் மேசையைத் தட்டி கரவொலி எழுப்பினர். தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள மற்ற வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து, “இந்திய வீரர்களின் செயல்பாடு நாட்டுக்கான மரியாதையை மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.