பாட்னா: பீகாரில் வெள்ளம் காரணமாக மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையால் கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பீஜா காவல் நிலையம் அருகே 75 மீட்டர் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு ரூ.3 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்தப் பாலம் முடியும் தருவாயில் இருந்தபோது, கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
சுமார் 25 மீட்டர் நீளமுள்ள தூண் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்தால் கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
பாலங்கள் இடிந்து விழுந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. முன்னதாக கடந்த 23-ம் தேதி கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள கோரசஹான் பகுதியில் ஒரு சிறிய பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதேபோல் சிவான் மாவட்டத்தில் கடந்த 22-ம் தேதி பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. 18-ம் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ. 12 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 180 மீட்டர் நீள பாலம் இடிந்து விழுந்தது.
கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பான்ஸ்பரி ஷ்ரவன் சவுக் அருகே மரியா ஆற்றின் குறுக்கே ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.