உத்தரபிரதேசம்: திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராடக்கூடாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வரும் நிலையில், தை அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதல் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராடக் கூடாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரயாக்ராஜுக்கு வரும் பக்தர்கள், உங்கள் அருகில் உள்ள கங்கை நதியில் நீராடுங்கள். திரிவேணி சங்கமத்தை நோக்கி செல்ல முயற்சிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, ஏற்பாடுகளைச் செய்ய ஒத்துழைக்க வேண்டும். சங்கத்தின் அனைத்து படிகளிலும் மக்கள் நிம்மதியாக குளித்து வருகின்றனர். வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.