திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. இலவச தரிசனத்துக்கு டிக்கெட் இல்லாமல் நேரடியாக வரும் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டியிருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருமலைக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், வைகுண்டம் கியூ வளாகத்திற்குள் நுழைந்து, காலக்கெடுவுடன் டோக்கன் பெற்று வெளியே வரலாம். வெளியில் வரும் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வைகுண்டம் வளாகத்திற்குச் சென்றால் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பக்தர்களுக்காக திருமலையில் ஆன்மிக பயணத்துடன், பாபவிநாசம் அணையின் நீரில் படகு சவாரி நடத்த வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும் என்றும், மலைகள் சூழ்ந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ள அணையில் படகு சவாரி செய்வது புது அனுபவத்தை அளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று பாபவிநாசம் அணையில் மூன்று படகுகள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டன. இந்த செயல் திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு படகிலும் எத்தனை படகுகள் இயக்க வேண்டும், எத்தனை பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதை விரைவில் திட்டமிட்டு, அதன்படி செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த படகு சவாரி திட்டத்தை வனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் தொடங்க அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாபவிநாசம் அணை மாசுபடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.