புதுடெல்லி: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்தில் மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து வக்ஃப் சட்டத் திருத்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நமது கூட்டு முயற்சியில் இது ஒரு திருப்புமுனையாகும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு இந்த மசோதா உதவும். இதை சாத்தியமாக்கும் வகையில் நாடாளுமன்ற மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று வக்ஃப் சட்டத்தை வலுப்படுத்த பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மதிப்புமிக்க கருத்துக்களை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல்முறைகள் மூலம், விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவத்தை நாங்கள் உறுதி செய்துள்ளோம். வக்ஃப் அமைப்பு பல ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் உள்ளது. குறிப்பாக முஸ்லீம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள் மற்றும் பஸ்மாண்டா முஸ்லிம்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியது.
இப்போது நிறைவேற்றப்படும் சட்டங்கள் எதிர்காலத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். அவர்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பார்கள். “ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிப்பதில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே வழி” என்று அவர் கூறினார்.