சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை சிங்கப்பூர் வந்தடைந்தார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளும் நான்கு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. வோங்குடனான சந்திப்புக்கு முன்னதாக சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் மோடி கையெழுத்திட்டார்.
வோங் பதவியேற்ற பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் முதல் பெரிய சந்திப்பு இதுவாகும். இந்தியாவின் உலகளாவிய உறவுகளை வலுப்படுத்துவதில் மோடியின் பயணம் ஒரு முக்கியமான படியாகும். இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் சிங்கப்பூரின் வணிக நலன்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மோடியும் வோங்கும் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். அதன் பிறகு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தையும் பிரதமர் மோடி சந்திக்கிறார். சிங்கப்பூரின் முன்னாள் மூத்த அமைச்சர்களான லீ சியென் லூங் மற்றும் கோ சோக் டோங் ஆகியோரையும் மோடி சந்தித்து முக்கிய அரசியல் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளார்.
மோடியின் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். குறைக்கடத்தி உற்பத்தி அமைப்பு சூழல் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.