டோக்கியோ: பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இது மோடி பிரதமராக ஜப்பானுக்கு மேற்கொள்ளும் எட்டாவது பயணமாகும். இந்த பயணத்தில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றை இணைக்கும் “குவாட்” அமைப்பின் எதிர்காலம், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்படவுள்ளன.

பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருடன் 15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது ஷிகெரு இஷிபாவுடன் அவரின் முதல் ஆண்டு மாநாடு என்பதால் இருநாட்டு உறவுகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் தனிப்பட்ட ஜப்பான் பயணமாவதும் இதன் சிறப்பாகும்.
இந்திய ரயில்வே நவீனமயமாக்கலில், குறிப்பாக புல்லட் ரயில் திட்டத்தில், ஜப்பானின் பங்கு மிகப்பெரியது. மும்பை–ஆமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டம், எதிர்காலத்தில் இந்தியாவின் பல நகரங்களுக்கு விரிவாக்கம் பெறும் வாய்ப்பு உள்ளது. ஜப்பானின் “ஷிங்கான்சென்” தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளும் நடைபெற உள்ளன.
வர்த்தகம் மற்றும் முதலீடு துறைகளிலும் இந்தியா–ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானுடன் உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சி இந்தியா மேற்கொள்கிறது.
இந்தோ–பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது. “குவாட்” நாடுகள் இணைந்து செயல்படுவதன் மூலம் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நோக்கம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
ஜப்பான் பயணத்தை முடித்த பிறகு, பிரதமர் மோடி சீனாவுக்கு புறப்பட உள்ளார். அங்கு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள், சீனாவின் சர்வதேச அரசியல் செயற்பாடுகள், ரஷ்யாவின் பங்குபற்றல் ஆகியவை அனைத்தும் சர்வதேச தளத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் மத்தியில், மோடியின் ஜப்பான் மற்றும் சீனா பயணங்கள் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றன.