புதுடில்லி: பாஜ எம்பிக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. இதில், “2047ல் வளர்ந்த இந்தியா” மற்றும் “சமூக வலைதளங்களை திறமையாக கையாள்வது” போன்ற தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு வந்தே பாரதம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.

பட்டறையில் பங்கேற்ற எம்பிக்கள், ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் அவரது பங்களிப்புக்கு மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர். இதற்கிடையில், பிரதமர் மோடி கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த புகைப்படம் வெளியானது. அது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், மதியத்திற்கு பிறகு விவசாயம், பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி, போக்குவரத்து தொடர்பான குழுக்களை எம்பிக்கள் சந்தித்து விவாதித்தனர். நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எம்பிக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பாஜ கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட, இண்டி கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றார். இந்த போட்டி தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.