திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தை அணுக காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்த நடிகை அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் மீது கொச்சி மரடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் மீது ஐபிசி 354, 509 மற்றும் 452 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் முகேஷ் எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம், புகார்தாரரின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், முகேஷின் முன்ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வுக் குழு தொடங்கியது.
சிறப்பு புலனாய்வு குழு விரைவில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
நடிகர் முகேஷுக்கு முன் ஜாமீன் வழங்குவது அடுத்தகட்ட விசாரணையை பாதிக்கும் என்றும் புகார்தாரரின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளது.