புதுடெல்லி: வரும் 31-ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் அன்றைய தினம் சிறப்பு பிரார்த்தனை நடத்த போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர். இதற்காக உ.பி.யின் சம்பல் மாவட்டத்தில் அனைத்து சமூக அமைதிக் குழுக் கூட்டம் மாவட்ட ஏஎஸ்பி சிஷ்சந்திரா தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏஎஸ்பி ஸ்ரீஷ்சந்திரா கூறுகையில், “ரம் ஜான் ஈத் பண்டிகையின் போது, பொது சாலைகளில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது. மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஈத்கா மற்றும் மசூதி வளாகங்களில் மட்டுமே தொழுகை நடத்தப்படும். இந்த பாரம்பரிய பூஜை நேரத்தில், மின்சாரம் மற்றும் தண்ணீர் ஏற்பாடுகள் சீராக செய்யப்படும். அதேபோன்று, ஈத் பண்டிகைக்கு பிறகு வரும் நவராத்திரியை மக்கள் பரஸ்பர நல்லெண்ணத்துடன் அமைதியாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மீரட்டில் எச்சரிக்கை: சம்பல் அருகே மீரட்டில் சாலையில் ஈத் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். மீரட்டின் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரார்த்தனை செய்பவர்கள் சிசிடிவி, ஆளில்லா விமானங்கள் மற்றும் உள் புலனாய்வுத் துறை மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படும்.
நிபந்தனைகளை மீறினால் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் என மீரட் போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா பரவலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிகளில் இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின் போது இந்த எச்சரிக்கை தொடர்கிறது. உ.பி.யில் கடந்த ஆண்டு ரம்ஜான் தொழுகையின் போது காவல்துறை உத்தரவை மீறியதாக 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.