ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 46ல் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இன்று பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தற்போது காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஹரியானா சட்டசபை தேர்தல் கருத்துக் கணிப்புகளை பல்வேறு அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
டானிக் பாஸ்கர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 15-29 இடங்களும், காங்கிரஸுக்கு 44-54 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆம் ஆத்மி கட்சிக்கு 0-1 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4-6 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
துருவ் ரிசர்ச் வெளியிட்டுள்ள கணிப்பின்படி பாஜக 22-32 இடங்களிலும், காங்கிரஸ் 50-64 இடங்களிலும் வெற்றி பெறும். பீப்பிள் பல்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி, பாஜக 20-32 இடங்களிலும், காங்கிரஸ் 49-61 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அக்டோபர் 8ஆம் தேதி உண்மை நிலவரம் தெரியவரும்.