புது டெல்லி: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயாராக இருக்குமாறு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. அந்த நேரத்தில், சிறப்பு தீவிர திருத்தத்திற்காக அக்டோபர் 30-ம் தேதிக்குள் கடைசியாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தயாராக இருக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து, பல மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி 2008-ல் மேற்கொள்ளப்பட்ட கடைசி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த பிறகு, நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2026-ல் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. வங்காளதேசம் மற்றும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பல மாநிலங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவற்றை நீக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த சிறப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.