சியாச்சின்: சியாச்சின் வந்த 3வது ஜனாதிபதி… உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சியாச்சின் ராணுவ முகாமிற்கு ராணுவ உடையில் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு, ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். இங்கு வந்த மூன்றாவது ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு நம் தேசம் காக்கும் ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு , சியாச்சின் ராணுவ முகாமிற்கு வருகை தந்தார். அப்போது ராணுவ உடை அணிந்திருந்தார். அவரை ராணுவ உயரதிகாரிகள் வரவேற்றனர். அங்குள்ள போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியது, கடினமான இச்சூழலில், தாய்நாட்டை பாதுகாக்க முழு அர்ப்பணிப்புடனும், விழிப்புடனும் செயல்படும் உங்களின் தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன் என்றார்.
இதற்கு முன் சியாச்சின் ராணுவ முகாமிற்கு கடந்த 2004-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமும், 2018-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தும் வருகை தந்துள்ளனர். இதையடுத்து சியாச்சின் ராணுவ முகாமிற்கு வந்த மூன்றாவது ஜனாதிபதி திரவுபதி முர்மு என்ற பெருமை பெறுகிறார்.