புதுடில்லி: நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை பல மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை பகிர்ந்து கொண்ட அவர், கடந்த சில வாரங்களில் பல உயிர்கள் இழந்த சம்பவங்கள் தன்னை வேதனை அடைய வைத்ததாக குறிப்பிட்டார்.

அவரது உரையில், கடந்த ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்ந்தார். அதே சமயம், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு ‘பிரதிபா சேது’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறமையான இளைஞர்களின் விவரங்கள் உள்ளதாகவும், இதனை அரசு மற்றும் தனியார் துறைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
வெள்ளப்பெருக்கு மற்றும் மழையால் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், ஜம்மு காஷ்மீர் இரண்டு பெருமையான சாதனைகளை படைத்துள்ளது. புல்வாமாவில் நடந்த முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், ஸ்ரீநகரில் நடந்த முதல் கேலோ இந்தியா நீர்விளையாட்டு போட்டிகளில், நாடு முழுவதிலிருந்தும் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் காஷ்மீரில் நீர்விளையாட்டுகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்ததாக பிரதமர் பாராட்டினார்.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விரைவான நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மீட்புப் படையினர் அயராது உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒற்றுமை மிக முக்கியம் என வலியுறுத்திய மோடி, தச்சர்கள், குயவர்கள், சிற்பிகள் போன்ற பாரம்பரிய தொழில்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளமாக உள்ளன என்றார். மேலும், உலகின் கவனம் இன்று இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளதால், ஒற்றுமையுடன் நாம் செயல்பட வேண்டும் என அவர் தனது உரையை நிறைவு செய்தார்.