அஸ்வால்: மிசோரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டங்களில், பைராயி–சாய்ராங் இடையே அமைக்கப்பட்ட 51 கி.மீ நீளமுள்ள புதிய ரயில் பாதை முக்கியத்துவம் பெற்றது. இதில் 45 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள் அடங்கியுள்ளன.
பிரதமர் மோடி உரையாற்றியபோது, “வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மிசோரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல தடைகளை தாண்டி பொறியாளர்கள், தொழிலாளர்கள் அர்ப்பணிப்புடன் உழைத்ததின் விளைவாக இந்த ரயில் பாதை சாத்தியமாகியுள்ளது. இது ஒரு ரயில்வே இணைப்பு மட்டுமல்ல, மிசோரம் மக்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தும் உயிர்நாடி” எனக் குறிப்பிட்டார்.

மேலும், சில அரசியல் கட்சிகள் நீண்ட காலமாக ஓட்டு வங்கி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தி, மிசோரம் போன்ற மாநிலங்களை புறக்கணித்ததாக அவர் குற்றம் சாட்டினார். “எங்கள் அரசு புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கு இந்தியா நாட்டின் வளர்ச்சி எஞ்சினாக மாறியுள்ளது. இப்போது 4,500-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இங்கு செயல்படுகின்றன” என்றார்.
அத்துடன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மருந்துகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் அதிக வரி விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இன்று மக்கள் குறைந்த விலையில் அவற்றைப் பெறுகின்றனர் என்று தெரிவித்தார். மிசோரம் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்தும் முழு ஆதரவு தரும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.