புதுடெல்லி: உ.பி.யில் உள்ள சகிபாபாத்தில் இருந்து மீரட் வரை நமோ பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை (ஆர்ஆர்டிஎஸ்) ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி-மீரட் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, உ.பி.யில் உள்ள சாகிபாபாத் மற்றும் டெல்லியில் உள்ள நியூ அசோக் நகர் இடையே 13 கி.மீ தூரம் ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வந்தது.
இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், புதிய ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அவர் சகிபாபாத்தில் நமோ பாரத் ரயிலில் பயணம் செய்து பயணிகள் மற்றும் குழந்தைகளுடன் உரையாடினார். டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் 4-வது கட்டமான ஜனக்புரி மேற்கு மற்றும் கிருஷ்ணா பார்க் விரிவாக்கம் இடையே புதிய சேவையை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார்.
ரித்தாலா, நரேலா மற்றும் குண்ட்லி பாதைக்கு அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணா பார்க் விரிவாக்க ரயில் நிலையம் தொடங்கப்பட்டதன் மூலம், தற்போது டெல்லி மெட்ரோ சேவையில் இயங்கும் நிலையங்களின் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளது.