நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மக்களிடம் உரையாற்றினார். 96 வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்திய நிலையில், 22 குண்டுகள் முழங்க விமானப்படை எம்.ஐ.17 விமானம் மலர் தூவியது.

அதன் பின்னர் போர் விமானங்கள் தேசியக் கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் கொடியையும் ஏந்தி பறந்தன. உரையில் மோடி, 140 கோடி மக்கள் பெருமையுடன் மூவர்ணக் கொடியை அணிந்துள்ளதாகவும், அது வெறும் கொடி அல்ல நமது பெருமை எனவும் தெரிவித்தார். கடந்த 75 ஆண்டுகளாக அரசியல் சாசனம் நம்மை வழிநடத்தி வருவதை அவர் நினைவூட்டினார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும், ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரர்களுக்கு தலைவணங்குவதாகவும் கூறினார். பயங்கரவாதிகளையும், அவர்களை பின்னால் இயக்கியவர்களையும் தண்டித்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்களை இந்தியா பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும், அணு அச்சுறுத்தலால் இந்தியா ஒருபோதும் அழுத்தமடையாது என்றும் தெரிவித்தார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் அநியாயம் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்றும், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.