ரஷ்யாவின் 80ம் ஆண்டு போர் வெற்றி தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி விருந்தினராக கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் வரும் மே மாதம் ரஷ்யா செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
1941ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை ஜெர்மனியின் நாஜி படைகள் மற்றும் சோவியத் யூனியன் இடையே நடைபெற்ற இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவில் ‘தி கிரேட் பேட்டிரியாட்டிக் வார்’ என அழைக்கப்படுகிறது. இந்தப் போரில் வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு நினைவாக வரும் மே 9ம் தேதி மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் (Red Square) பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்புடன் சிறப்பாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் மோடி இதில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேநேரம், இந்திய ராணுவத்திற்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவ அணிவகுப்பில் இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்கலாம் எனவும், இதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகள் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தார். தற்போது மே மாதம் ரஷ்யா செல்லும் திட்டம் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.