புதுடெல்லி: இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை அதிகரிக்க உள்ளது; திறமையான இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் பணிபுரிய வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்; இந்திய இளைஞர்களின் திறமையால் உலகமே மயங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலின் 200-வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சுவாமி நாராயணன் கோவில் நிறுவப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இந்திய கலாச்சாரத்தின் தொடர்ச்சிக்கு இது ஒரு சான்று. ஸ்வாமி நாராயண் கோவிலின் ஆன்மீக உணர்வை உயிருடன் வைத்திருக்கிறோம்.
இந்த மகத்தான நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்திய அரசு ரூ.200 வெள்ளி நாணயம் மற்றும் நினைவு முத்திரையை வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வளர்ந்த இந்தியாவுக்கான அடிப்படை நமது நாடு தன்னிறைவு பெறுவதே. இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இந்தியா தன்னிறைவு பெறுவதை உறுதி செய்ய வேண்டும்; நாட்டின் 140 கோடி மக்கள் இதைச் செய்ய வேண்டும்.
இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான முக்கிய முயற்சி உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகும். துரதிர்ஷ்டவசமாக இன்று சிலர் தங்களின் குறுகிய புரிதலின் காரணமாக அதன் முக்கியத்துவத்தை மறந்து விடுகிறார்கள். சமூகத்தை ஜாதி, மதம், மொழி, மேல், தாழ்வு, ஆண், பெண், கிராமம் என்று பிரிக்கும் சதி நடக்கிறது. தேச விரோதிகளின் இந்த முயற்சியின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்வதும், நெருக்கடியைப் புரிந்துகொள்வதும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும் அவசியம்.
வலிமையான, திறமையான, படித்த இளைஞர்களை உருவாக்க வேண்டும். திறமையான இளைஞர்கள் நமது மிகப்பெரிய பலமாக மாற வேண்டும். இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது. பல உலகத் தலைவர்களை நான் சந்திக்கும் போது அவர்கள் கூறுவது திறமையான இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் பணியாற்ற முன்வர வேண்டும்.
இதை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்திய இளைஞர்களின் திறமையைக் கண்டு உலகமே மயங்குகிறது. போதைக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள சுவாமிநாராயண் சமூகம் மிகவும் கடினமாக உழைத்துள்ளது. இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து விலக்கி வைப்பதில் நமது மகான்களும் மகாத்மாக்களும் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். போதையில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற இதுபோன்ற பிரச்சாரங்களும் முயற்சிகளும் எப்போதும் அவசியம்.
இதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். 500 ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தியின் உதாரணம் நம் அனைவருக்கும் உள்ளது. காசி மற்றும் கேதாரத்தின் மாற்றமும் நம் முன் உள்ளது. அதுமட்டுமின்றி, நம் நாட்டில் திருடப்பட்ட பல நூறு ஆண்டுகள் பழமையான சிலைகள் தேடப்பட்டு, திருடப்பட்ட நம் கடவுள் மற்றும் தெய்வங்களின் உருவங்கள் மீண்டும் நம் நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. நம் கோவில்களுக்குத் திரும்புகிறார்கள். இந்த முறை பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது.
ஜனவரி 13-ம் தேதி முதல் சுமார் 45 நாட்கள் நடைபெறும் இந்த கும்பமேளாவுக்கு 50 கோடி பக்தர்கள் வருவார்கள். உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளியினர் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு கும்பமேளா குறித்து விளக்கமளிக்க வேண்டும். இந்த கும்பமேளாவிற்கு குறைந்தது 100 வெளிநாட்டினரையாவது வரவழைக்கவும். இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றினார்.