போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களால் கடந்த சில ஆண்டுகளில் மோதல்கள் நடந்துள்ளன. இதனால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பும், கோடிக்கணக்கான சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் மத அவதூறு தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், பெண்கள் பற்றிய அவதூறு தகவல்களைத் தடுக்கவும் அரசு சமூக ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தது. இதற்காக 6 உறுப்பினர்களையும் நியமித்தது. இந்தக் குழு பல்வேறு நிபுணர்களைக் கலந்தாலோசித்து, இதற்கான சட்டத்தை உருவாக்க முயற்சித்தது.

இந்தக் குழு “கர்நாடக தவறான தகவல் மற்றும் போலிச் செய்தி தடை மசோதா”வைத் தயாரித்து சட்ட அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. அதில், சமூக ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் போலிச் செய்திகள் கண்டறியப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கும், அவதூறான கருத்துக்களைப் பகிர்பவர்களுக்கும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட முடியாத வகையில் கடுமையான சட்டப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து விரைவில் அமைச்சரவையில் விவாதிக்க முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார். மசோதா ஒப்புதல் பெற்ற பிறகு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.