ஆந்திரா: பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம், தலா 220 கிலோ எடைகொண்ட ஸ்பேடெக்ஸ்-ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ்-பி என இரு சிறிய செயற்கைக்கோள்கள், 470 கிலோ மீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
பின்னர், இந்த இரு செயற்கைக்கோள்களும் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் முறையில் ஒன்றிணைக்கப்பட உள்ளன. இந்தியாவின் கனவுத் திட்டமான மனிதரகளை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அத்துடன், 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிட்டுள்ளது.
அதற்கான ஸ்பேஸ்-எக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் செயல்முறை வெற்றிபெற்றால், விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் பணியை சாத்தியப்படுத்திய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.