புதுடில்லி: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது. கடந்த ஆகஸ்ட் 1 இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என ஆணையம் தெரிவித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாய சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வார தொடங்கில் இந்த வழக்கில் பிராமண பத்திரம் தாக்கல் செய்த் தேர்தல் ஆணையம், சட்டப்படி, நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது.
இந்நிலையயில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் வெளியிட நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இதுதொடர்பான அறிக்கையை 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினர்.
மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஆதார் கார்டுகள், EPIC நம்பர்களை செல்லுபடியாகும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.