சண்டிகர்: வடஇந்தியாவில் பல வாரங்களாக பெய்து வரும் கனமழையால் பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள், பாலங்கள், பாசன வசதிகள் என பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் பெருமளவில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை, வெள்ள பாதிப்புகளை சமாளிக்க மாநில அரசுடன் சேர்ந்து ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு படையும் பணியாற்றி வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களை காக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகிறார். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டு, மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களை கேட்க உள்ளார். பாதிப்பு நிலவரத்தை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயம், பஞ்சாப் மக்களின் நலனில் மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதை வெளிப்படுத்துவதாக பாஜ மாநில பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த விஜயம் அரசியல் மற்றும் பொதுமக்கள் நிலைமையில் முக்கியத்துவம் பெறுகிறது.