சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது பாலியல் பலாத்கார புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா பாட்டியாலா மாவட்டம் சனுார் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆவார். ஒரு பெண் அவர் மீது திருமண ஏமாற்றம் மற்றும் பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறி இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டதாக அந்த பெண் புகார் அளித்திருந்தார். ஆனால் அவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது முதல் மனைவியின் பெயரை குறிப்பிட, உண்மை வெளிப்பட்டதாக அந்த பெண் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, பதன்மஜ்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் அவர் தனது கட்சியின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். “என் மீது பொய்யான வழக்கு பதிக்கப்பட்டுள்ளது. என்னை சிறையில் அடைக்கலாம், ஆனால் மக்களுக்காக பேசும் என் குரலை நிறுத்த முடியாது,” என அவர் கூறியிருந்தார். இதனால் பஞ்சாப் அரசியலில் பெரும் புயல் எழுந்தது.
இதற்கிடையில், ஹரியானாவில் உள்ள உறவினர் வீட்டில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது, போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓடினார். இந்த சூட்டில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இரு சொகுசு கார்களில் தப்பியோடிய நிலையில், ஒன்றை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் பதன்மஜ்ரா இன்னும் தப்பியோடி வருவதாகவும், அவரை பிடிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.