பிரதமர் மோடி அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனளிக்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் சத்ரபதி சிவாஜி சிலையை ராகுல் காந்தி இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, நாட்டில் 2 சித்தாந்தங்கள் இருப்பதாகவும், ஒன்று அரசியல் அமைப்பை அழிப்பது என்றும், மற்றொன்று அதைப் பாதுகாப்பது என்றும் கூறினார். இதில், அரசியல் அமைப்பை பாஜக அழித்துவிட்டதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
மேலும் விழாவில் பேசிய ராகுல் காந்தி, “சத்ரபதி சிவாஜியின் சிலை இன்று திறக்கப்பட்டது. ஒருவருடைய சித்தாந்தத்தையும், அவரது செயல்களையும் நாம் முழு மனதுடன் ஆதரித்தால் சிலை உருவாகிறது. நாடு அனைவருக்கும் சொந்தமானது, அனைவரும் எடுக்கப்பட வேண்டும் என்ற செய்தியை சத்ரபதி சிவாஜி வழங்கினார். சத்ரபதி சிவாஜி தன் வாழ்நாள் முழுவதையும் அநீதிக்கு எதிராகச் செலவிட்டார். நீதிக்கான போர் தொடுத்தார்.
சத்தியத்தின் வழியைப் பின்பற்றக் கற்றுக் கொடுத்தார். அவரது வழியை பின்பற்றி, மக்களின் நீதிக்கான உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம். பாஜகவினர் நிறுவிய சத்ரபதி சிவாஜி சிலை சில நாட்களில் உடைக்கப்பட்டது. சிவாஜிக்கு சிலை வைத்தால் மட்டும் போதாது, அவரது சித்தாந்தமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் செய்தி.