புது டெல்லி: டெல்லியில் நடந்த காங்கிரஸ் சட்ட மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, “லோக்சபா தேர்தல்களில் மோசடி செய்ய வாய்ப்புள்ளது. 2024 லோக்சபா தேர்தலிலும் மோசடி நடந்துள்ளது. இதை நிரூபிக்க எங்களிடம் இப்போது தரவுகளும் ஆவணங்களும் உள்ளன. இதை நாங்கள் நிரூபிக்கப் போகிறோம். ஒரு லோக்சபா தொகுதியின் வாக்காளர் பட்டியலை நாங்கள் ஆய்வு செய்தபோது, மொத்தமுள்ள 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள் என்பதைக் கண்டறிந்தோம்.
இந்த மோசடியால்தான் பாஜக வெற்றி பெற்றது. அவர்களுக்கு 15-20 இடங்கள் குறைவாக கிடைத்திருந்தால், அவர் (பிரதமர் நரேந்திர மோடி) பிரதமராகியிருக்க மாட்டார். இந்தியாவில் தேர்தல் ஆணையம் இறந்துவிட்டது. நான் நீண்ட காலமாக தேர்தல் முறையைப் பற்றிப் பேசி வருகிறேன். 2014 முதல் ஏதோ தவறு நடக்கிறது என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் இருந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து எனக்கு ஏற்கனவே சந்தேகங்கள் இருந்தன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில், காங்கிரஸ் கட்சிக்கு (லோக்சபாவில்) ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இதைப் பற்றி நாங்கள் பேசும் போதெல்லாம், மக்கள் ஆதாரம் எங்கே என்று கேட்டார்கள். அப்போதுதான், “மகாராஷ்டிராவில் ஏதோ நடந்தது. அங்கு மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், நாங்கள் தோற்கடிக்கப்படவில்லை; அழிக்கப்பட்டோம்.
எனவே, தேர்தல் முறைகேடுகளை நாங்கள் தீவிரமாகத் தேடத் தொடங்கினோம். மகாராஷ்டிராவில், மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில் 1 கோடி புதிய வாக்காளர்கள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். அந்த வாக்குகளில் பெரும் பகுதி பாஜகவுக்குச் சென்றது. இதற்கான ஆதாரம் இப்போது எங்களிடம் உள்ளது. இதை எந்த சந்தேகமும் இல்லாமல் என்னால் கூற முடியும்,” என்று அவர் கூறினார்.
தேர்தல் மோசடி குறித்த ராகுல் காந்தியின் கூற்றை இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் கூறப்படும் இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் புறக்கணிக்கிறது. நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பணிபுரியும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.