புது டெல்லி: பீகார் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1.20 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்வுப் பட்டியலை உடனடியாக வெளியிடக் கோரி தலைநகர் பாட்னாவில் கடந்த 19-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று சமூக ஊடகங்களில் வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மரம் நடுவது, குழந்தைகள் பாடுவதைக் கேட்பது, காட்டிற்குச் செல்வது, மயில்களுக்கு உணவளிப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

வீடியோவுடன் சேர்த்து ராகுல் காந்தி ஒரு பதிவில் கூறியதாவது:- மத்தியில் ஆளும் பாஜக அரசின் கீழ் வேலையின்மை அதிகரித்து வருகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை உள்ளது. வேலையின்மைக்கும் வாக்கு மோசடிக்கும் நேரடி தொடர்பு உள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெறும் கட்சி அரசாங்கத்தை உருவாக்குகிறது.
அந்த அரசாங்கத்தின் முதல் பணி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகும். ஆனால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சி அமைத்த பாஜக, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை. அவர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக மாறிவிட்டது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.